Home Base Learning

Home Base Learning

India

 

இந்திய வி.ஐ.பிக்கள்

இந்திய வி.ஐ.பிகளைப் பற்றி நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத விசயங்களைப் பார்ப்போம். இந்தியாவின் விஐபிக்கள் எண்ணிக்கை 5,79,092 ஆகும். இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட, சீனாவில் விஐபிக்கள் வெறும் 435 மட்டுமே. மற்ற வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் 252, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகியவை விஐபிக்கள் 200 க்கும் குறைவாக நியமித்துள்ளன. இந்தியாவில் அரசியல்வாதிகள், உயரடுக்கு வணிகர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள் என பலரும் விஐபி அந்தஸ்தைப் பெறுகிறார்கள். நம் நாட்டில் நிலவும் வி.ஐ.பி கலாச்சாரம் ஒரு முரட்டுத்தனமாக மாறிவிட்டது, எதை யூகிக்கிறது, இது முன்பைப் போலவே உயர்கிறது. உண்மையில், இந்தியாவில் உலகிலேயே அதிக வி.ஐ.பிக்கள் உள்ளனர், அவர்கள் சாதாரண இந்தியர்களை விட எல்லாவற்றையும் முன்னுரிமை பெறுகிறார்கள், அதுவும் நாம் செலுத்தும் வரிப்பணத்தில். விஐபிக்கள் எதற்காக? மக்கள் பணி அல்லது பொதுப்பணியில் இருக்கும் நபர்கள் மக்கள் பணியை தடையின்றி விரைவாகச் செய்வதற்கு ஏதுவாக சில வசதிகளையும், சௌகரியங்களையும் அரசு செய்துகொடுக்கும். அந்த வகையில் இருக்கும் பிரமுகர்கள் விஐபி எனலாம். இந்தியாவில் யார் யார் விஐபிக்கள் ஜனாதிபதி, துணைத் ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்திய ஆயுதப் படைகளின் சேவைத் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், நீதிபதிகள், கவர்னர்கள், பல தொழிலதிபர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட வி.ஐ.பி. பட்டியலில் உள்ளனராம். இந்திய நாடாளுமன்றத்தில் 543 மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் என 251 பேர் இருக்கிறார், இது தனி. நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவையில் கிட்டத்தட்ட4,120 எம்.எல்.ஏக்கள் என பட்டியல் நீளுகிறது . விஐபி கலாசாரமும் சிறப்பு அம்சங்கள் மற்றும் சலுகைகளும் • சைரன்கள் மற்றும் போக்குவரத்து நிறுத்தம் • அளவுக்கதிகப்படியான பாதுகாப்பு • விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் • விஐபி அலங்காரம்(Plaques) • மோட்டார் வாகனத்தொடர்கள் • விஐபி இடஒதுக்கீடுகள் • வீட்டில் காவலர்கள் • பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வ கார்கள் • பிரீஃப்கேஸ்களை எடுத்துச் செல்ல ஆட்கள் அதுமட்டுமின்றி விமான பில்கள், வெளிநாட்டு பயணம் மற்றும் விடுமுறை, தபால் அனுப்புதல், இலவச மின்சாரம், இலவச நீர், மானியங்களில் உயர் தரமான உணவு மற்றும் கேன்டீன்களில் மற்றும் பிற சலுகைகள். இலவசங்கள் போன்றவற்றுக்கு தகுதியுடையவர்கள். ஒவ்வொரு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.விற்கும் சராசரியாக 3 போலீசார் பாதுகாப்பு வழங்குகிறார்கள். இந்தியாவில் மிக முக்கியமான நபராக இருப்பது மிகவும் சொகுசான ஒன்று. நீங்கள் இந்தியாவில் ஒரு வி.ஐ.பி என்றால், சாதாரண மக்கள் பொறாமைப்படும் அளவுக்கு சொகுசுகள் அனுபவிக்கலாம். மேற்சொன்ன செலவுகள் விஐபிக்களின் சேமிப்பாகும். மேலும், அவர்களின் சம்பளத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை. ஒரு எம்.பி. தனது சொந்த பாக்கெட்டிலிருந்து ஒரு ஊசியைக் கூட வாங்குவதில்லை, நாம் செலுத்தும் வரியிலிருந்து அவர்களது எல்லா செலவுகளையும் கவனித்துக்கொள்வது அரசாங்கமே. எம்.பி.க்களுக்கு மாதத்திற்கு ரூ.50 ஆயிரம், தொகுதி நிதியாக ரூ .45,000, அலுவலக செலவாக ரூ.15,000, செயலக உதவிக்கு ரூ.30,000 பெற உரிமை உண்டு. நாடாளமன்றம் அமர்வில் இருக்கும்போது, அவர்களுக்கு தினசரி ரூ.2,000 அலவன்ஸ் கிடைக்கும். எம்.பி.க்கள் ஒரு ஆண்டுக்கு 34 விமான பயணங்களும், வரம்பற்ற ரயில் மற்றும் சாலை பயணங்களும் மேற்கொள்ளலாம். விஐபி பாதுகாப்பு பிரிவுகள் • SPG வகை - பாதுகாப்பு விவரங்களின் வலிமை வகைப்படுத்தப்பட்டுள்ளது (தற்போதைய இந்திய மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது.) • Z + பிரிவில் 55 பணியாளர்களின் பாதுகாப்பு அட்டை உள்ளது [10+ NSG கமாண்டோ உட்பட] + [போலீஸ் பணியாளர்கள்] Z + நிலை பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு காவலர் கமாண்டோக்களால் வழங்கப்படுகிறது. • Z- பிரிவில் 22 பணியாளர்களின் பாதுகாப்பு அட்டை உள்ளது [4 அல்லது 5 என்.எஸ்.ஜி கமாண்டோ உட்பட] + [போலீஸ் பணியாளர்கள்] • Y- பிரிவில் 11 பணியாளர்களின் பாதுகாப்பு அட்டை உள்ளது [1 அல்லது 2 கமாண்டோ உட்பட] + [போலீஸ் பணியாளர்கள்] • X- பிரிவில் 2 பணியாளர்களின் பாதுகாப்பு அட்டை உள்ளது [கமாண்டோ கிடையாது, ஆயுதமேந்திய போலீஸ் பணியாளர்கள் மட்டுமே] விஐபி கலாச்சாரத்தினால் ஏற்படும் பிற சிக்கல்கள் வி.ஐ.பிக்கள் போக்குவரத்து விதிகளை தண்டனையின்றி மீறுகிறார்கள் மற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை புறக்கணிக்கிறார்கள், ஏனென்றால் அவை சாதாரண மனிதர்களுக்கானவை என்று எண்ணுகிறார்கள். இந்த விஐபிக்களின் பாதுகாப்பிற்கு திருப்பிவிடப்படும் பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையால் பொதுவான குடிமக்களின் பாதுகாப்பும் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், விஐபிக்கள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. வி.ஐ.பிக்கள் என்று அழைக்கப்படுவதற்காகவே போக்குவரத்து தடைசெய்யப்படுவது, விமானங்கள் தாமதமாக்கப்படுவது பெரும்பாலும் நிகழ்கிறது. இதனால், இந்திய மக்கள் விஐபிக்களை வெறுப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை - நம்முடையதைப் போலவே நாடாளுமன்ற முறை இருக்கும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வசதிகளைப் பெறுகிறார்கள், ஆனால் அவர்கள் பொறுப்புடன் வேலை செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில், நமது விஐபி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எந்த பணியும் செய்யாமல் ராஜவாழ்க்கை வாழ்கின்றனர் விஜபி கலாச்சாரத்திற்கெதிராக வழக்கு கடந்த 2013, பிப்ரவரி 14, உச்சநீதிமன்றம் ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டது, இது பல ஆண்டுகளாக பொதுமக்களின் மனதில் குழப்பும் விஐபி கலாச்சாரம். தற்போதுள்ள வி.ஐ.பி கலாச்சாரத்தை நீதிமன்றம் எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தாக்கல் செய்த மனுவில், வி.ஐ.பி.களுக்கு முன்னுரிமை அளித்து போக்குவரத்தை வெகு நேரம் நிறுத்தி, அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவது, தங்கள் கார்களில் ஒளிரும் "சிவப்பு விளக்குகள் " மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக சைரன்கள் அடித்துச் செல்வது பற்றிய விவரங்களை அளித்தார். "அச்சுறுத்தல் கருத்து அதிகாரத்தின் அடையாளமாக மாறும்" என்று குறிப்பிட்ட பெஞ்ச், அத்தகைய ஏற்பாடுகள் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்களை வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. அதேசமயம், "5 ஆண்டுகளில் நகரத்தில் (மும்பை) வி.ஐ.பி க்களுக்கான காவல்துறை அட்டையில் 1,200% உயர்வு", "703 வி.வி.ஐ.பிகளுக்கு (பஞ்சாப்) பாதுகாப்பு கிடைக்கிறது". விஐபி போன்ற பதாகை தலைப்புகளின் மூலம் ஏராளமான காவல் பலத்தை வி.ஐ.பி பாதுகாப்புக்கு திசைதிருப்பப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டினார். சிகப்பு பெக்கான் விளக்குகள் உலகெங்கிலும் வண்ண பீக்கான்கள் அவசர கடமைகளில் பயணிக்கும் அவசர வாகனங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அவசர காலங்களில் தவிர, சைரன்களை ஊதுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமையை நியாயப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் மோட்டார் வாகனச் சட்டங்களின் கீழ் தங்கள் விதிகளை கடைபிடிப்பதாகச் சொல்லலாம். 2002 மத்திய விதிகளின்படி, 19 வகை உயர் பிரமுகர்களுக்கு ஃப்ளாஷருடன் சிவப்பு பீக்கான்கள், ஃப்ளாஷர் இல்லாமல் சிவப்பு விளக்குகள், உள்ளூர் அதிகாரப்பூர்வ பிரிவுகள் அம்பர் பெக்கான் மற்றும் அவசரகால வாகனங்கள் நீல பீக்கான்களுடன் அனுமதிக்கப்படுகின்றன. அமைச்சரவை செயலாளர் அல்லது மாநில தலைமை செயலாளரைத் தவிர வேறு எந்த அதிகாரி, தலைவர்கள் அல்லது செயல் தலைவர்கள் தவிர வேறு அதிகாரியும் சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்த முடியாது. எவ்வாறாயினும், கிட்டத்தட்ட அனைத்து மூத்த செயலக அதிகாரிகளும், பிரிகேடியர் நிலை பாதுகாப்பு அதிகாரிகளும் கூட சிவப்பு விளக்குகளைக் பயன்படுத்துகின்றனர். இந்த "அங்கீகரிக்கப்பட்ட பட்டியலை" கூட உச்சநீதிமன்றம் கடுமையாக கட்டுப்படுத்த மேற்படி வழக்கில் சால்வே கோரினார். கடந்த ஏப்ரல், 19, 2017 அன்று பிரதமர் மோடி “ஒவ்வொரு இந்தியனும் சிறப்பானவரே. ஒவ்வொரு இந்தியரும் ஒரு வி.ஐ.பி’ என்று விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல்படியாக பீக்கான் பயன்பாட்டை நிறுத்தி உத்தரவை அறிவித்தார். அதன்பின், மத்திய அமைச்சரவை அறிவித்த உடனேயே, பல மாநிலங்களின் முதல்வர்கள் தங்கள் கார்களில் இருந்து பீக்கான்களை அகற்றுவதாக அறிவித்தனர். சிகப்பு பீக்கானை அகற்றினால் போதுமா, கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விஐபிக்கள் அலப்பறை தாங்கமுடியவில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை முறிக்கும் செயல்பாடாக இக்கலாச்சாரம் உள்ளது. லட்சக்கணக்கில் உள்ள விஐபி அங்கீகாரத்தை நூற்றுக்குள் அடக்கி, மக்கள் பணி அவசரத்திற்கு மட்டும் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும்.

இந்தியர்களை கொல்கிறதா மன அழுத்தம்?

அதிகநேரம் உழைப்பது உலகளவில் இந்தியர்களின் பெருமை. அதேசமயம், மூளையின் ஒவ்வொரு இன்ச்சிலும் ஏராளமான கமிட்மென்டுகளை நிறைப்பதால் மனஅழுத்தம் அதிகரித்து திடுக் மரணங்களும், நோய்களும் இந்தியர்களைத் துரத்தி வருகின்றன! தினசரி 12 மணி நேரத்துக்கும் மேலாக அலுவலக வேலைகள் உடல்நலனைக் காவு வாங்குவதோடு மகிழ்ச்சிக்கும் வேட்டு வைக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் ஒருவழியாக ஒப்புக்கொண்டுவிட்டனர். கிடுகிடு வேகத்தில் அதிகரிக்கும் இதயநோய், நீரிழிவு, உளவியல் பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம், வேலைப்பளுதான் என உலகளவிலான பல்வேறு ஆய்வறிக்கைகள் தகவல் கூறுகின்றன. அன்லிமிட்டெட் வேலை காரணமாக கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்துள்ள இதயநோயின் அளவு 34%. உலக சுகாதார அமைப்பின்(WHO) அறிக்கைப்படி 1971 - 2000 காலகட்டத்தில் அதிகரித்துள்ள நீரிழிவு நோயின் அளவு 12%. 19 ஆயிரம் இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 52 மணிநேரம் பணிபுரிவது மேன் பவர் குழும ஆய்வில் தெரியவந்திருக்கிறது. மன அழுத்தத்தில் தடுமாறும் 95% இந்தியர்களுக்கு 40 வயதுக்குள்ளாகவே இதயநோய் தாக்குதல்கள் தொடங்கிவிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது இந்தியன் ஹார்ட் அசோசியேஷன் அறிக்கை (2018). இதில் மக்களுக்கு வழிகாட்டும் டாக்டர்களும் அடக்கம்! மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளால் 2030ம் ஆண்டு இந்தியாவில் ஏற்படும் பொருளாதார இழப்பு 4.58 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என்கிறது 2014ம் ஆண்டு வெளியான உலக வணிக அமைப்பு (WEF) மற்றும் ஹார்வர்ட் மருத்துவப்பள்ளி அறிக்கை. ஒருவரின் அலுவலகச்சூழல் அவரின் மரணத்திற்கு ஐந்தாவது காரணம் என விளக்கியுள்ளது ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி பெஃபர் எழுதிய ‘Dying for a paycheck’ என்ற நூல்.ஆபீஸில் பணியாளர்களின் மன அழுத்தம் போக்க கஃபே, ஜிம், நூலகம் என வசதிகளை அறிமுகப்படுத்தினாலும் நாள் ஒன்றுக்கு 13 மணிநேரம் வேலைசெய்யும்போது உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள எப்படி நேரம் கிடைக்கும்? ஜப்பான், தென்கொரியாவில் அதிகரிக்கும் மன அழுத்த தற்கொலைகளை தடுக்க மாலை 6 மணிக்கு மேல் பணியாளர்கள் ஆபீசில் இருக்கக்கூடாது என அந்நாட்டு அரசுகள் சட்டத்திருத்தங்களே கொண்டு வந்துள்ளன. தாராளமய பொருளாதாரத்தில் வேலை நெருக்கடி என்பது இயல்பானதாக மாற்றப்பட்டு அதனை நாம் ஏற்றுக்கொள்ளும் சமரசம்தான் மன அழுத்த தற்கொலைகளில் முடிகிறது. மனஅழுத்தம் காரணமாக இந்தியர்கள் பேங்க் பேலன்ஸை உயர்த்தி நாற்பது வயதில் ஓய்வுபெறுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது இந்தப் பிரச்னையால்தான் என்கிறது ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ். ஆறு நாட்கள் வேலை என்பதை மாற்றி 5 நாட்கள் வேலை என்பதை உலகிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளன. நியூசிலாந்தைச் சேர்ந்த பர்பெக்சுவல் கார்டியன் நிறுவனம், 4 நாட்கள் மட்டுமே வேலை என அறிவித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் டவர்பெடல் போர்ட்ஸ் நிறுவனம் (ஸ்டீபன் ஆர்ஸ்டல்), காலை 8 முதல் நண்பகல் 1 மணிவரை வேலை என ஐந்து நாட்களின் நேரங்களை மாற்றி பணியாளர்களின் மனதையும் லாபத்தையும் வென்றுள்ளது. வேலைப்பளு நெருக்கடியை மாற்றி உடல்நலனையும் மனநலனையும் பாதுகாக்க நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இதுவே

கோத்திரங்கள்

24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. சிலர் வீடு என்றும் குறிப்பிடுவார்கள். இதில் 16 (பதினாறு) கோத்திரங்கள் ஆண் வீடு என்றும் 8 (எட்டு) கோத்திரங்கள் பெண் வீடு என்றும் வகைப்படுத்தபட்டுள்ளன. '16 பதினாறு வீடு (ஆண் வீடு) மனை (குலம்) கோத்திரம் குல ரிஷி மும்முடியார் ஸ்ரீ முகுந்த ரிஷி கோலவர் (கோலையர்) ஸ்ரீ குடிலஹு ரிஷி கணித்தியவர் ஸ்ரீ கௌதன்ய ரிஷி தில்லையவர் தொந்துவ ரிஷி பலிவிரியர் (பலுவிதியர்) ஸ்ரீ ஸௌலய ரிஷி சென்னையவர் ஸ்ரீ ஹரிகுல ரிஷி மாதளையவர் ஸ்ரீ குந்தள ரிஷி கோதவங்கவர் ஸ்ரீ கணத்த ரிஷி ராஜபைரவர் ஸ்ரீ ரோசன ரிஷி வம்மையர் ஸ்ரீ நகுல ரிஷி கப்பவர் ஸ்ரீ சாந்தவ ரிஷி தரிசியவர் ஸ்ரீ தர்ஷிய ரிஷி வாஜ்யவர் ஸ்ரீ வசவ ரிஷி கெந்தியவர் ஸ்ரீ அனுசுயி ரிஷி நலிவிரியவர் ஸ்ரீ மதஹனு ரிஷி சுரையவர் ஸ்ரீ கரஹம ரிஷி '8 எட்டு வீடு (பெண் வீடு) மனை (குலம்) கோத்திரம் குல ரிஷி மக்கடையர் ஸ்ரீ மங்கள ரிஷி கொரகையர் ஸ்ரீ கௌதம ரிஷி மாரெட்டையர் ஸ்ரீ மண்டல ரிஷி ரெட்டையர் கௌஷிக ரிஷி பில்லிவங்கவர் ஸ்ரீ பில்லி ரிஷி தவளையார் ஸ்ரீ கௌந்தைய ரிஷி சொப்பியர் ஸ்ரீ சோமகுல ரிஷி லொட்டையவர் ஸ்ரீ பார்த்துவ ரிஷி திருமண உறவு இந்த சமூகத்தினர் 16 வீடு மற்றும் 8 வீடு ஆகிய இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் 16 (ஆண்) வீட்டைச்சேர்ந்த கோத்திரப் பிரிவினர் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அது போல 8 (பெண்) வீட்டைச்சேர்ந்த பிரிவினரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இதன் காரணம் ஒரே பிரிவில் இருப்பவர்கள் சகோதர உறவாக கருதப்படுவதே ஆகும். குலதெய்வ வழிபாடு 24 மனை குலதெய்வ வழிபாடு கூட அவரவர் கோத்திர அடிப்படையிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களுக்குள் ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, அத்தெய்வத்துக்கு சொந்தமாக ஒரு கோவிலையும் அமைத்துக் கொண்டுள்ளார்கள். பெருங்கோவில்களுக்கும் குலதெய்வ கோவில்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், இம்மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட பங்காளிகள் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும். அங்காளிகள், பங்காளிகள் ஒரு கோத்திரத்திற்கு உள்ளே அங்காளிகள், பங்காளிகள் என்று இரண்டு வகையினர் உண்டு. அங்காளிகள் என்றால் அங்கத்துடன் ஒட்டிப் பிறந்தவர்கள், அதாவது கூடப் பிறந்தவர்கள். பங்காளிகள் என்றால் சித்தப்பா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள், ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட என்பார்களே அவர்கள். இதுபோல, அங்காளிகளும், பங்காளிகளும் சேர்ந்து வழிபடுவதுதான் குல தெய்வ வழிபாடு. தமிழ்நாட்டில் பெரும்பாலும் எல்லாக் குலதெய்வங்களுக்கும் சிவன், பார்வதி, திருமால் இவர்களோடு தொடர்பு உள்ள புராணக்கதைகள் உள்ளன. அந்தக் கதைகளின்படி சிவன், பார்வதி, திருமால் இவர்களின் அவதாரங்களும், இவர்களின் மறுபிறப்புகளும், இவர்களின் காவல்தெய்வங்களும் தான் தமிழர்கள் அனைவருக்கும் குலதெய்வங்களாக உள்ளன. இந்தக் கதைகள் உண்மையா? கற்பனையா? பார்ப்பனர்கள் திணித்ததா? நாமே விரும்பி ஏற்றதா? என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் இந்தக் கதைகளின் அடிப்படையில் தான் குலதெய்வங்கள் உள்ளன. அந்தக் குலதெய்வங்களை அடிப்படையாக வைத்துத்தான் தமிழர்கள் திருமணங்களில் மாமன், மச்சான், பங்காளி முறைகளை அடையாளம் காண்கிறார்கள். திருமணங்களைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்களும், கன்னடம் பேசும் மக்களும்கூட இந்த அடிப்படையில் தான் திருமண உறவுகளை மேற்கொள்கின்றனர். சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மூன்று பெரிய தெய்வங்களில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சிவவழிபாடும், திருமால்வழிபாடும் உண்டு. குலதெய்வம் என்று இருப்பதெல்லாம் அந்தந்தக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து ஏதாவது ஒரு வீரத்தினாலோ அல்லது விபத்தினாலோ முடிவு எய்தவர்கள். அவர்களைத்தான் குலதெய்வம் என்று வைப்பது வழக்கம். எங்களுடைய மாமன், மைத்துனர் வகையில் இருப்பவர்களெல்லாம் காமாட்சி அம்மன் என்ற பெயரிலே வைத்துக் கொண்டார்கள். இதில் எல்லாம் பார்வதி தான் அவதாரம் என்றாலும் ஒவ்வொரு குடும்பமும் அவர்களுக்கு மரபுப்படி உறவைக் காட்டுவது போல அமைந்துள்ளது. எங்கள் கிராமத்தில் காமாட்சி அம்மன் கும்பிடுபவர் எங்களுக்கு மாமன் முறைப்பட்ட வகை. அண்மைக்காலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. எங்களுடைய குலதெய்வம் என்பது தில்லாளம்மன், தில்லையம்மன். தில்லையம்மன் என்பது தில்லையில் இருக்கக்கூடிய அம்மன். சிவபெருமானுடைய மனைவி என்பதனால் தில்லை அம்மன் என்று பெயர் வந்தது. தில்லாளம்மன் என்பது அதனுடைய மறுபெயர்தான். தில்லையம்மன், தில்லாளம்மன், பார்வதி, பகவதியம்மன், காமாட்சி அம்மன் எல்லாம் பார்வதியைக் குறிக்கக்கூடிய பெயர்கள் தான். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதைகள். தில்லையம்மன் என்பது சிவனை அடைவதற்காக பிறவி எடுத்து அந்த பெண்ணும் நடனத்தில் சிவனைப் போல சிறந்து விளங்கி காதலால் இருவரும் திருமணம் முடித்தக் கொண்டவராவார். அங்காள பரமேஸ்வரி தீக்குண்டத்திலிருந்து எழுந்தவள். அவளும் பார்வதிதான். பார்வதியின் அடுத்த பிறவி அங்காள பரமேஸ்வரி. ஆனாலும் அவர்கள் தனி. வீரபுத்திரன், அரியபுத்திரன், அங்காளம்மன், அங்கம்மாள் என்ற பெயரோடு அங்கு ஒரு கோவில் இருந்தது. காமாட்சி அம்மனும் பார்வதியின் அவதாரம்தான். அதேபோல பகவதிஅம்மன் என்பவள் சிவபெருமானை விட்டு அகழாதபடி சிவனுடைய உடலிலேயே பாகம் பெற்றவளனதால் பாகவதி, பகவதி என்ற பெயரோடு இருக்கிறது. பிறக்கும் குழந்தைகளுக்குக் குலதெய்வத்தின் அடிப்படையில்தான் பெயர் வைக்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது. அது உண்மையா? சிதம்பரத்தினுடைய இன்னொரு பெயர் தில்லைவனம். தில்லைவனத்தில் இருக்கக்கூடிய தெய்வம் தில்லான். தில்லான் என்றால் நடனம், நடராசன் என்று பொருள். நடராசன் என்ற பொருளிலும், தில்லைவனத்தில் இருக்கும் காரணத்தினாலும் தில்லையான் என்ற பெயர் மருவி தில்லான் என்று வந்தது. சிதம்பரத்திலுள்ள சிவபெருமானைக் குலதெய்வமாகக் கருதியதனால் எங்கள் கிராமத்திலுள்ள 250 வீடுகளில் எங்களுடைய பங்காளியாக இருக்கும் 175 குடும்பங்களுக்கு மேல் ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த ஆணுக்கு “தில்லான்” என்றும், மூத்த பெண்ணுக்குத் “தில்லையம்மாள்” என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு மரபாக வந்துள்ளது. அந்த மரபுப்படி எனக்கு என் குடும்பத்தில் மூத்தவனாக இருப்பதால் “தில்லான்” என்று பெயர் வந்தது. வடஇந்தியாவை பொருத்தவரையிலும், தென்இந்தியாவை பொருத்தவரையிலும் வேறு இடங்களில் இல்லையென்றாலும் அருப்புக்கோட்டை பக்கத்தில் உள்ள திருச்சுழியில் ஒரு கோவிலில் தட்சிணதில்லான் என்ற பெயரில் ஒரு தெய்வம் உண்டு. சிவபெருமான் தெற்கு முகமாக பார்த்திருப்பது தட்சிணாமூர்த்தி என்பார்கள். அந்தத் தட்சிணாமூர்த்தியுடைய சிலைக்குக் கீழ் தட்சிணத்தில்லான் என்ற பெயர் இருப்பது ஒன்றுதான் ஆதாரம் கிடைக்கின்றது. வரலாறு கிடைக்கின்றது. மற்றபடி இந்தப் பெயர் மரபுப்படி வந்ததே தவிர நானாக விரும்பி வைத்த பெயர் அன்று. குலதெய்வத்தோட பெயரை வீட்டில் இருக்கிற முதல் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ வைக்கிற பழக்கம் குறிப்பிட்ட ஒரு ஜாதியில் மட்டும் இருக்கிறதா? தமிழ் நாட்டில் இருக்கிற அனைத்து ஜாதியிலும் இருக்கிறதா? எல்லா ஜாதிகளிலும், எல்லாக் குலதெய்வங்களிலும் இந்த மரபு உண்டு. அய்யன் என்றும், காத்தான் என்றும் காமாட்சி என்றும் பெயரை அந்தந்தக் குலப்பிரிவுக்குஏற்ப, பெயர் வைப்பது உண்டு. வைணவ மதத்துக்காரர்களின் பெரியதெய்வமாக அந்த சிவனைப் போல திருமாலும் இருந்தாலும் - அழகப்பன் என்றும், அழகன் என்றும் வைக்கிறார்கள். அழகன், அழகப்பன் என்பது பாடுபடும் இனத்திற்கு அதாவது பள்ளர்கள் வைக்கிறார்கள், வன்னியர்கள் வைக்கிறார்கள். அந்த அளவுதான். மேலிடத்தில் அழகர்சாமி என்று வைப்பார்கள். செட்டியார்கள் அழகர்சாமி என்று வைக்கிறார்கள். நீலமேகம், நீலகண்டன் என்று சொல்லி முன்னேறிய இனத்தவர்கள் வைத்துக் கொண்டார்கள். எல்லாம் ஒருவனே. பல, பல பெயர்கள். இராமன் என்றாலே தாழ்த்தப்பட்டவன், ராமசாமி என்றாலே மேல்ஜாதி. ராமசாமி என்றபெயரை தாழ்த்தப்பட்டவர்னு சொல்றவங்க யாரும் வைத்துக் கொள்வதில்லை. மேல் ஜாதிக்காரர்கள் இராமன் என்று வைத்துக் கொள்வதில்லை. குப்புசாமி, குப்பன் என பெயர் வேறுபாடு உள்ளது. தாழ்த்தப்பட்டவர் கந்தசாமி என்று வைத்துக் கொண்டாலும் மேல்ஜாதிக் காரர்கள் என்று சொல்லப்படுவர்கள் கந்தன் என்றுதான் கூப்பிடுவார்கள். கந்தன் என்று சொல்வார்களே தவிர கந்தசாமி எனச் சொல்ல மாட்டர்கள். ஆனால் கந்தனும், கந்தசாமியும் பாலசுப்பிரமணியனும் முருகனும் எல்லாமே காக்கும் கடவுள்கள்தான். சிறுதெய்வங்கள்தான். குலத்துக்கு தகுந்தபடி எழுத்தை மாற்றுகிறார்கள். இப்போது இந்த முறையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. எங்கள் குடும்பத்தில் மூத்தவனுக்கு ‘தில்லான்’ என்றிருந்தால், இரண்டாவது பையனுக்கு ‘பச்சை’ என்றும் பச்சையப்பன் அது பச்சையப்ப முதலியார் தொடங்கி கி.த. பச்சையப்பன் வரை இரண்டாவது பையனாகத்தான் இருக்கும். அந்தப் பச்சையப்பன் என்பது சிவனையும், பச்சையம்மாள் என்பது பார்வதியையும் குறிக்கும். ஆனால் அந்தப் பழக்கம் மறைந்து வருகிறது. திருமால் என்றால் அழகன், அழகப்பன் என்ற பெயர் வந்தது. அந்த பெயர்களில் ஊர்கள் உண்டு, அழகம்மாள் என்று பெண் பெயர் வைப்பது உண்டு. அது எல்லாம் திருமாலை அடிப்படையாக வைத்தது. ஆனாலும் ஒவ்வொரு ஜாதியிலும் இந்தப் பெயர் உண்டு. குலப்படி இது வந்து தெய்வ வழிபாடுகளிலிருந்தே அப்படியே வந்து இப்போது மரபாகவே மாறிவிட்டது. சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்றும் பெருதெய்வங்கள். இவர்களுடைய அடுத்த பிறவிகள் சிறு தெய்வமாக வருகிறார்களா? ஆமாம். அடுத்த அடுத்த பிறவியாக வந்தபோதல்லாம் சிவபெருமான் இடையராக, உழவனாக, உழைப்பாளியாக பிறந்து வருவார். ஒவ்வொரு குலத்துக்கும் கேட்டால் அவர்களுகென்று ஒரு மூலம், பிடித்துக்கொண்டே போனால் அங்கு ஒரு முனிவர் வருவார். அந்த முனிவர் யாருனா தேவலோகத்தில் இருந்த தேவர்கள் தவறு செய்து, சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு இங்க வந்து பிறக்கிறாங்க. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்துவாக இருந்து, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அவர்கள் பெண் கொடுத்து பெண் எடுப்பது அந்தந்த இந்துக் குலசாமியை வைத்துத்தானா? கிறிஸ்த்துவரா இருந்தாலும் மாரம்பாடி, வெள்ளோடு, சிலுக்குவார்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, கரிசல்பட்டி ஆகிய சுற்றுப் பகுதியில் இருக்கக்கூடியவர்கள் போய், பெண் வீடு, மாப்பிள்ளை வீடு, பார்த்து மரபுப்படி பார்ப்பவர்கள் எந்தச் சாமி கும்பிடுறவங்கன்னு கேக்குறாங்க. கருப்புசாமியா, காமாட்சி அம்மனா என்று கேட்பார்கள். மாரம்பாடியில இருக்கக்கூடியவர்கள் நாங்க மாமுண்டியான் சாமி கும்பிடுறவங்க என்பார்கள். மாமுண்டி என்பது திருமாலுடைய ஒரு அவதாரம். அதைச் சொல்லி பெண் கட்டுவாங்க. ஆனால் அதை வணங்குவது இல்லை. அந்த வரலாறும் தெரியாது. அதேபோல காங்கேயம் குடும்பம்னு சொல்றாங்க. சிலுக்குவார்பட்டியில மைக்கேல் பாளையம்னு ஒன்று உள்ளது. அந்த ஊர்க்காரங்க ஆனையடியான் பேரைச் சொல்லிக்கிட்டுப் பெண் கேட்கிறார்கள், கட்டுகிறார்கள். அப்படி ஒவ்வொருத்தருக்கும் இங்கு நேரடியாக முறையோடு இருப்பது காமாட்சி அம்மன், கருப்பசாமி தான். சங்க இலக்கியத்துல நடுகல் வழிபாடுன்னு சொல்றாங்க, அந்த நடுகல் வழிபாட்டுக்கும், குல தெய்வ வழிபாட்டுக்கும் என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை? நடுகல் வழிபாடு என்பதற்கு குலவேறுபாடு இல்லை. மற்ற சிறுதெய்வ வழிபாட்டுக்கு செட்டிச்சி அம்மனைத் தில்லாளம்மன் கும்பிடுபவர்கள் கும்பிடமாட்டாங்க. வீரு மல்லம்மாளை இந்த செளடம்மன் கும்பிடுறவங்க கும்பிடமாட்டாங்க. ஆனால், சில இடங்களில் மூங்கிலணைக் காமாட்சி அம்மன் கோவில் (திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது) போன்ற இடங்களில் பல ஜாதிகள், பல குலங்கள் ஒரே தெய்வத்தைக் கும்பிடுகின்றனர். இந்தக் கோவிலில் உள்ள காமாட்சி அம்மனை கன்னடம் பேசும் செட்டியார்களும், தெலுங்கு பேசம் நாயக்கர்களும், தமிழ்பேசும் தேவர்களும், வன்னியர்களும் குலதெய்வமாகக் கும்பிடுகின்றனர். எல்லா ஜாதிகளிலும் இருக்கும் சிவ வழிபாட்டுக்காரர்களும், பார்வதி வழிபாட்டுக்காரர்களும் ஒருவருக்கொருவர் மாமன், மச்சான் முறையைக் கடைபிடிக்கிறார்கள். அந்தப் புராணக் கதைகளின் அடிப்படையில் காமாட்சி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள நாயக்கர், தேவாங்கச் செட்டியார், தேவர், வன்னியர் எல்லோரும் ஒரே தெய்வத்தை வணங்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நடுகல் எல்லோருமே வணங்குவார்கள். நடுகல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நடுகல் என்பது வரலாற்றை அடிப்படையாக வைத்தது. இந்தக் குல தெய்வ வழிபாடு என்பதற்கு எந்த வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. சிறுதெய்வ வழிபாடு என்றால், சிறுதெய்வத்திலேயே மறுபிறவி எடுத்து வந்த பெரியதெய்வம் என ஒவ்வொரு வகை. இடைப்பட்ட வாழ்க்கையில் போனவர்கள் ஒருவகை. மரபு மாறிச் சிறியவர்கள், பெரியவர்கள், சாதியால், பொருளாதாரத்தால் அல்லது குடும்பத்தால் மாறுபட்டதோடு வந்து சிதைந்து போன வாழ்க்கை உடையவர்களை மறக்காமல் கும்பிடுகிறார்கள். அது ஒருவகை, வீரக்கல், நடுகல் வழிபாடு இருக்குதே இது இப்பொழுது பெரியாரை எப்படி வணங்குகிறோமோ, அதுபோலவே பிறந்தநாள், நினைவு நாள் என நினைப்பதுபோல நடுகல்லுக்கும். பொங்கல், பூ இதெல்லாம் வேண்டிக்கிறது இல்லை. இராணுவ வீரர்கள் இறந்த நாளை நினைவு நாள்னு வைத்து வணக்கம் செய்வதுதான் நடுகல் வழிபாடு. இந்தக் குலதெய்வ வழிபாட்டுமுறை எந்தக் காலத்தில் உருவாகியது? குலதெய்வ வழிபாட்டு முறை உருவாகிய காலத்தைக் குறித்துச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் முருகனையே வெறியாட்டயறுதல் ஒன்று வைத்திருக்கிறார்கள். வெறியாட்டயறுதல் போர்களத்தில் போய் புண்பட்டு வீட்டில் வந்து படுத்து இருக்கும்போது பேய்கள் வந்து தொடாமல் இருக்க வேப்பில்லை வைத்து அடித்தற்கு சான்று இருக்கு. இங்கு அதுவும் ஒரு வழிபாடுதான். ஆனால் அப்படி வழிபாடு செய்ததைத் தமிழில் சொல்லி வணங்குகிறார்கள். அதற்கு முன்பு சிலப்பதிகாரத்துல சதுக்கபூதம் என்று வைத்து பொய் பேசினால், உழல் செய்தால் நடுவின்றி மன்றில் போய் சாட்சி சொன்னால் அவர்களை அடித்து தின்றுவிடும் என்று வைத்துக் கொண்டார்கள். எங்கள் ஊரிலும் மன்றூர் என்று ஒரு இடம் உண்டு. காளியம்மன் கோவிலுக்கு முன்னால் அந்த அந்த இடத்தில் சாமி கும்பிடும்போது அந்தக்கல்லை வைத்துக் கும்பிடுகிறார்கள். அந்தச் சாமி கும்பிடுவதன் நோக்கம் நடுநிலை தவறமாட்டேன், யோக்கியம் தவறமாட்டேன், ஊழல் செய்யமாட்டேன் பிறர் உயிரைக் கொல்லமாட்டேன், கொலை, கொள்ளை திருடு செய்ய மாட்டேன் என்று சொல்லி உறுதிமொழி எடுப்பதறகான ஒரு இடம் மன்று. அதை இப்போது ‘மண்டு’ ன்னு சொல்லி அந்தச் சாமியை மண்டுனு சொல்லி வைத்தார்கள். அது இந்திர விழா நடந்த சாயல் இங்கே தெரிகிறது. ஆயிரம் வருடத்திற்கு முன்னால் இந்த வழிபாடு உண்டு. இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு இல்லை. மனிதனுக்கு பயம் இருந்தது. சாமியை வணங்கினான். தமிழில் வணங்கினான் அந்த மரபு ஞான சம்பந்தர் முதல் இன்றைக்கு வரைக்கும் இருந்ததுதான். ஆனால் இந்தமுறை அதிகமான காலம் என்பது நாயக்கர் காலம்தான். குலதெய்வங்களான தில்லையம்மன், கருப்பசாமி, கருப்பணசாமி மற்றும் சிறு தெய்வ வழிபாடு சங்க இலக்கியங்களில் இருந்ததா? அதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா? இதே சாமிகள் அப்போ இல்லை. அப்ப இருந்தெதல்லாம் போர்களத்துல இறந்தவனை தெய்வமாக வைத்துக் கும்பிட்டார்கள். அவ்வளவுதான், அதன் பிறகு புராணங்கள் வந்து தமிழ் நாட்டுல அதிக செல்வாக்கு பெற்ற காலத்தில், பரமசிவனுடைய அவதாரம் போல, திருமாலுடைய அவதாரம் போல, பிரம்மா வழியாக படைக்கப்பட்ட முனிவர்கள் போல புராணக்கதைகள் வந்தன. அதற்குப் பின்னாடிதான் சிறுதெய்வ வழிபாடு. அக்கினியில் தோன்றியவர்கள் வன்னியர்கள்… எப்படிப் பிறந்தாங்கன்னா அக்னி குண்டத்துல இருந்து முனிவர் தோன்றி வந்தார்கள் என்பது வன்னிய புராணம். சாதிக்குச் சாதி புராணம். அப்படி வந்த போது சிறுதெய்வ வழிபாடு பெருகியது. சங்க காலத்திற்குப் பின்னால். அதற்கு முன்னால் இருந்த சிறு தெய்வ வழிபாடு என்பது வீரர்களுக்கு செய்ததுதான். இந்த அவாண்டசாவு இன்னும் மற்றதெல்லாம் இருக்கிறதே, தொட்டிச்சி அம்மன் அது இதுன்னு இந்த பெயர்களைப் பார்த்தாலே தெரியும். வீரு மல்லம்மாள், வீரு நாகம்மாள், செளண்டம்மாள், தொட்டிச்சி அம்மாள் என்ற பெயர்களைப் பார்த்தாலே பிற்காலத்துதான். ஏனென்றால் அதற்கு முன்னால் முருகனையே சிறுதெய்வம்னுதான் சொன்னாங்க. முருகன் வழிபாடு உண்டு. எப்ப மனிதனுக்கு மனதில் அச்சம் தோன்றியதோ, காடுகளில் வாழ்ந்த போது விலங்குகள் கிட்ட இருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்தானோ, இடிக்கு பயந்தானோ, மழைக்கு பயந்தானோ, புயலுக்கு பயந்தானோ அப்பொழுதே முருகனை வணங்குகிறான். புராணம் வந்த பிறகுதான் கல்விக்காக இருப்பது சுவாமிமலை முருகன், திருமணத்துக்காக இருப்பது திருப்பரங்குன்றம் முருகன், தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டார் என்பதைக் காட்டுவதற்குத் திருத்தணி முருகன் எனப் பிரித்துக் கதைகளை உருவாக்கினார்கள். பார்ப்பனர்களின் கோத்திரத்திற்கும், இந்தக் குலங்களுக்கும் எதாவது தொடர்பு உண்டா? பலகுடும்பங்கள் இணைந்தது குலம். பல குலங்கள் இணைந்தது கோத்திரம். தமிழர்களிடையே அப்படி கோத்திரம் என்ற பெயரில் எந்த நடைமுறையும் இல்லை. நாம் குலதெய்வம் பார்த்துத் திருமண முறையை முடிவு செய்வது போல, பார்ப்பன இனத்தில் கோத்திரம் பார்த்து மாமன், மச்சான், பங்காளி முறைகளை முடிவு செய்கிறார்கள். குலம், கோத்திரம் என்று சொற்கள் வேறு வேறாக இருந்தாலும் இரண்டின் தன்மையும் ஒன்றுதான். இப்போது எல்லாச் சாதியும் ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டார்கள். அப்படி எல்லாம் முனிவர்கள் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. அது அகத்திய முனிவர் வரைக்கும் கூட. அகத்திய முனிவர் கோத்திரம் இந்த அகத்திய முனிவர் இல்லை. இந்த தமிழ் அறத்தை எழுதிவைத்தாரே இவருக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. கோத்திரங்கள் என்று வைப்பதற்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லையா? இல்லை, பிருகு முனிவர் கோத்திரம், அத்தி முனிவர் கோத்திரம், அகத்திய முனிவர் கோத்திரம், கெளசிக முனிவர் கோத்திரம் எல்லாம் இருக்கும். ஆனால் கோத்திரத்திற்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை. புறநானுறு, அகநானுறுக்கும் பிற்பட்டதுல எங்கையாவது சேர்ந்திருக்கும். அதற்கு முன்பு இல்லை. புராணம் வந்துவிட்டால்தான். வரலாற்றில் இல்லை. கல்வெட்டில் இல்லை. கல்வெட்டு தோன்றியதே அதற்குப் பின்புதான். சங்க இலக்கிய காலத்துக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் சங்ககாலம்னு சொல்றான். அது முதல் சங்க காலம்னு ஒன்று இருக்கிறது பாருங்கள் அதுவரை கோத்திரம் கிடையாது. முனிவர் வரலாறு எல்லாம் பிரம்மா, பிரம்மாவுக்கு அடுத்தபடியாகப் படைக்கப்பட்ட முனிவர்கள், முனிவருடைய மகன்கள். எல்லா முனிவர்களின் மகன்களும் தவறான வழியில் பிறந்தவர்கள். எல்லா முனிவர்களும் அப்படித்தான். அதனால்தான் அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. வன்னியர்கள்கூட இப்போது, நாங்களெல்லாம் சம்பு முனிவர் வழி வந்தவர்கள் என்று ஒரு புராணக்கதையைக் கூறிக்கொள்கிறார்கள். இவையெல்லாம் கற்பனையே. சங்ககாலத்தில் இந்தக் கோத்திரம் இல்லை. அது உறுதி. பின்னால் வந்தது. இராஜராஜ சோழன் காலத்தில் பார்ப்பனர்கள் இங்கு அதிகமாக வந்ததற்குப் பின்னால், தமிழர்களிடையேயும் கோத்திரங்கள் வந்தன. தெலுங்கர்கள் இங்கு வந்து கலந்தார்கள். அதன் பிறகு இந்தக் கோத்திர முறைகள் பரவலாகிவிட்டன.

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது குலம் என்றால் "குடும்ப பாரம்பரியம்' என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். குழந்தைகளுக்கு முடி எடுப்பது, காது குத்துவது, திருமணப் பட்டுப்புடவை, திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்துக் குலதெய்வ பூஜை செய்வது எல்லாமே நம் குலம் தழைக்கச் செய்யப்படுவதாகும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். எது நம்குல தெய்வமாகும் நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. இதனால்,ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதை யில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. குலதெய்வ வழிபாடு ஏன்? நமது குலதெய்வங்கள், அவர்களது குறிப்பிட்ட நல்ல செய்கைகளுக்காகவும், குணங்களுக்காகவும் வழிபடப்படுபவை. ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை காணலாம். வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள். தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தை வழிபட்டு அதே குணம் நம்மிடையே அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம். முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள், தெய்வ சம்பத்து உடைய பெரியோர்கள். அவர்கள் கடவுளை நோக்கி தவம் புரிந்தவர்கள், அந்த நிலையில் இறந்தவர்கள். இது போன்ற தெய்வங்களை வழிபடும்போது நம்மிடையேயும் கடவுளை அடைய விரும்பும் குணம் பலப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் அவர்கள் போரில் இறந்தவர்களையும், நோயில் இறந்தவர்களையும், இறைவனை நோக்கி வழிபாடு செய்து இறந்தவர்களையும் கும்பிடுகிறார்கள். நாகூர் தர்கா, அஜ்மீர் தர்கா இன்னும் மூலைக்கு மூலை தர்காக்கள் இப்படியே ஏற்பட்டன. கிறிஸ்துவ மதத்திலோ புனிதர்கள் என்ற பெயரில் பலரை வழிபடும் வழக்கம் இருக்கிறது. பைபிளில் ஆதாரமில்லாத போதும் ‘புனிதர்’ என்ற பெயரில் இயேசுவின் தாயாரை வழிபடுவது தொடர்கிறது. மந்திரவாதிகள் குறிசொல்பவர்கள் நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும், குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர, அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில், யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்திவிட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு. பெண்கள் மட்டும் இரண்டு குலதெய்வங்களை வணங்கு கிறார்கள். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறகு பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இஷ்ட தெய்வமும் குலதெய்வமும் நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது. துன்பகரமான சம்பவங்கள் நடக்கிறது. திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. தடைகள் விலக பரிகாரம் எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிராத்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம். அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள். குலதெய்வம் எது என்று எப்படி தெரிந்துக்கொள்வது? யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு . குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், வெள்ளிகிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் நம் வீட்டின் தலைவாசல் காலிலும், வீட்டின் பூஜை அறையிலும் மஞ்சள் குங்குமத்தை அவரவர் குலவழக்கத்தின்படி வைத்து வணங்கி, வாசனை மலர்களை தூவி கற்பூர தீபஆராதனை காட்டி, “எங்கள் குலதெய்வமே நீ இருக்கும் இடம் எங்களுக்கு தெரியவேண்டும். உன்னை நாங்கள் அறிய வேண்டும். எங்களுக்கு உன் அருள் வேண்டும். நம் குலத்தை காக்க வா.” என்று மனதால் வேண்டினாலே நிச்சயம் ஒருநாள் உங்கள் குலதெய்வத்தை பற்றிய விபரம் யார் மூலமாவது தெரிந்துக்கொள்வீர்கள். இது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை. பொதுவாக யாரை பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவர்கள் நம்மை ஒருநாள் தேடி வருவார்கள். டெலிபதி என்று கூறுவார்களே… அந்த டெலிபதி மனிதர்களுக்கு மட்டும் அல்ல தெய்வ செயலுக்கும் இது பொருந்தும். குலதெய்வம் வாசம் செய்கிற இடம் தலைவாசல் காலிலும், பூஜை அறையிலும்தான் தன் குல மக்களை காக்க குலதெய்வம் வாசம் செய்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வாசல்படியிலும், வீட்டின் பூஜை அறையிலும் அவரவர் குலவழக்கத் தின்படி மஞ்சல் – குங்கமம் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். புலம்பெயர்ந்து வந்த முன்னோர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாகவோ அல்லது முஸ்லீம் படையெடுப்புகளின் காரணமாகவோ புலம்பெயர்ந்து வந்திருக்கின்றனர் எங்களது முன்னோர்கள். இந்தியாவில் பெருமளவில் புலம்பெயர்தலை தூண்டியது முஸ்லீம் படையெடுப்புகள். அதற்கு அடுத்தபடியாக பஞ்சங்கள். படையெடுப்புகளும், அந்நிய ஆட்சிகளும் பஞ்சங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. தொடர்ந்து வணங்கும் குலதெய்வம் 13 வம்சாவளியினருக்கு மேல் இருக்கமுடியாது திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பது இதுதான் எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குலதெய்வம் இருக்கமுடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்சவிருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது ... விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக்காண்போமா.....? விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23 + 23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x + x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது. ஒரே கோத்திரத்தில் திருமணம்செய்யக்கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள். ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் , ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.. இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன்தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை , தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே. குலதெய்வத்தை வணங்கி அருள் பெறுக கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு. குழந்தைக்கு காது குத்துவது, முடிகாணிக்கை போன்ற தங்கள் வீட்டு விசேஷங்களை முதலில் குலதெய்வ கோவிலில்தான் நிறைவேற்றுவார்கள்

மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி

மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் செஞ்சி தாலுக்காவில் விழுப்புரத்தில் உள்ளது . இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள். க்ஷ யாகத்தின் போது உயிர் துறந்த பார்வதியின் உடலை சிவபெருமான் சுமந்து கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தபோது அவருடைய கோபத்தை தணிக்க விஷ்ணுவானவர் பார்வதியின் உடலை பல துண்டுகளாக வெட்டி எறிந்தார். அப்போது அவளது உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக ஆயிற்று. அப்படி நடந்த நிகழ்ச்சியில் பார்வதியின் வலது கை விழுந்த இடமே மேல்மலையனூறாம். அவளை அங்கு உருவமில்லாத நிலையில் இருக்குமாறும் தான் வந்து அவளை மனப்பதாகவும் சிவன் கூறியதாகவும் ஆகவேதான் பார்வதி புற்று உருவில் அங்கு வந்து தங்கினாள் என்ற ஒரு கதை உள்ளது. இன்னொரு கதையின்படி ஒரு முறை தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்த அசுரர்களை அழிக்க விஷ்ணு பகவான் பார்வதியின் துணையை நாடினார். அப்போது புற்று உருவில் இருந்த பார்வதி அவர் வேண்டுகோளை ஏற்று ஒரு அகோர உருவான காளியாக வெளிவந்து அவருக்கு உதவி செய்து அசுரர்களைக் கொன்றாள். ஆனால் அதன் பின்னும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை. ரத்தவெறி பிடித்து அலைந்தாள். அதனால் அவளை சாந்தப்படுத்த விஷ்ணு பகவான் அவளை சமாதானப்படுத்த ஒரு ரதத்தில் ஏறி வந்தார். பார்வதிக்கு விஷ்ணு பகவான் ஒரு சகோதரர் போல. ஆகவே விஷ்ணு பகவான் எங்கோ யுத்தத்திற்குச் செல்ல மீண்டும் தன்னை துணைக்கு அழைக்கின்றார் என எண்ணியவள் அவர் வந்த ரத்தத்தில் ஏறிக் கொண்டாள். அவரோ அந்த ரதத்தை மேல்மலையனூர் மயானத்தின் மேல் வழியாக செல்வது போலச் சென்று அந்த ரதத்தை மயானத்தின் நடுவில் கொண்டு சென்று அதை பூமிக்குள் இருந்த அவளது புற்றின் மீது விழ வைக்க தன்னிலைக்கு வந்தவள் அங்கேயே புற்று வடிவில் அமர்ந்தாளாம். அதனால்தான் அங்காள பரமேஸ்வரிக்கு வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழாவே நடக்கின்றது. அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள். இன்னொரு கதையின்படி ஒரு முறை தேவர்களை துன்புறுத்தி வந்த அரக்கர்களான சண்டோபி மற்றும் சுந்தரர் என்பவர்களை அழிக்க பிருமா யாகம் ஒன்றை செய்தார். அப்போது அதில் இருந்து அப்ஸராக்களும் திலோத்தமையும் வெளி வந்தார்கள். திலோத்தமை என்பவள் பார்வதி எடுத்து ஒரு அவதாரம் ஆகும். அவள் அழகில் மயங்கிய பிரும்மா அவளை அடைய அவளை பின் தொடர்ந்து கைலாசம் வரை சென்றார். அப்போது பிரும்மாவிற்கு சிவபெருமானைப் போலவே ஐந்து தலைகள் உண்டு. தன்னை பின் தொடர்ந்து வந்தது சிவனாரே என நினைத்தவள் இருட்டில் வந்து கொண்டு இருந்தவரைக் கண்டு நின்று அவரை கீழே விழுந்து வணங்கினாள். அதன் பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவர சிவபெருமானிடம் அவள் அது குறித்துக் கூறினாள். கோபம் கொண்ட சிவ பெருமான் நேராகச் சென்று பிருமாவின் ஐதாவது தலையை கிள்ளி எறிந்து விட்டார் . அதனால் பார்வதி மீது கோபம் அடைந்த பிருமாவின் மனைவியான சரஸ்வதி பார்வதி அகோர உருவை அடையமாறு சாபமிட்டாள். அது மட்டும் அல்லாமல் சிவபெருமானும் தாகத்தினாலும் பசியினாலும் சுற்றித் திரிய வேண்டும் என்றும் அவர் கையில் விஷ்ணுவின் கிள்ளி எறியப்பட்ட தலை கபாலமாக ஒட்டிக் கொண்டு இருக்கும் என்றும், அந்த கபாலம் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உணவையும் உண்டு விடும் எனவும் அதனால் சிவன் ஒன்றும் கிடைக்காமல் பசியோடு அலைவார் என்றும் சாபமிட்டாள். சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவ பெருமான் அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பார் என்றார். அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் பசியோடு அங்கும் இங்கும் அலைந்துகொண்டு மேல்மலையனூரில் இருந்த நதியைத் தாண்டி வந்தபோது அகோர உருவில் இருந்த பார்வதியும் பாம்பு உருவில் இருந்து வெளிவந்து உணவை எடுத்துக் கொண்டு அவருக்கு தரச் சென்றாள். வேண்டும் என்றே சிவனுக்கு கொடுத்த உணவை அவள் தரையில் போட்டுவிட சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி அதை சிவன் எடுக்காமல் இருக்க தனது வாயில் கவ்வியது. அதையே எதிர்பார்த்து காத்து இருந்த பார்வதி தனது உடலை மிகப் பெரியதாக்கிக் கொண்டு அந்த கபாலத்தை பூமியுடன் சேர்த்து மிதிக்க கபாலமும் சுக்கு நூறாக உடைத்தது. கபாலமும் சுக்குநூறாக உடைய சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றார் . அவர் அவளை சிதம்பரத்து வருமாறும் அங்கு தான் அவளை மணப்பேன் கூறினார். அகோர உருவில் இருந்த பார்வதி தன்னுடைய பழைய உருவை அடைய தேவர்கள் மற்றும் முனிவர்கள் அவளை ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு சிதம்பரத்துக்குச் செல்ல அங்கு அவள் சிவபெருமானை மணந்தார். அதே நேரத்தில் தான் மேல் மலையனூரில் அதே அதி பயங்கர உருவுடன் இருந்தவாறு அங்கு வந்து அவளை வேண்டித் துதிக்கும் பக்தர்கள் சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து, பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனிய தீமைகளை ஒழித்து, அவர்கள் நலனைக் காத்தருளிக் கொண்டு இருப்பேன் எனவும் கூறிவிட்டு மறைந்தார். அதனால் பார்வதி அதே இடத்தில் பூமியில் புற்றில் பாம்பாக உள்ளதாக ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் உள்ளது. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கின்றார்கள். வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைகின்றார்கள். பிப்ருவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழாவே நடக்கும்போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அற்பநிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். அதைப் பார்கவே பயமாக இருக்கும். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும் அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த ஆலயம்